அந்தியூர், சென்னசமுத்திரம் பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அந்தியூர், சென்னசமுத்திரம் பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2023-08-12 22:08 GMT

அந்தியூர், சென்னசமுத்திரம் பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தியூர்

அந்தியூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று முன்தினம் பகல் 11 மணிக்கு நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் தலைமை தாங்கினார். செயல் அதிகாரி செல்வகுமார் முன்னிலை வகித்தார். இதில் 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 13 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் கோரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள், 1 அ.தி.மு.க. கவுன்சிலர் என மொத்தம் 11 பேர் செயல் அதிகாரி செல்வகுமாரிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு தலைவர் பாண்டியம்மாள், செயல் அதிகாரி செல்வகுமார் ஆகியோர் வெளியேறினர்.

ஆனால் எதிர்ப்பு தெரிவித்த 11 கவுன்சிலர்களும் அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்கு அலுவலகம் நேரம் முடிந்ததும் கவுன்சிலர்கள் அலுவலகத்துக்கு வெளியே தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் இரவு 11.30 மணி அளவில் கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கொடுமுடி

கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சியில் நேற்று முன்தினம் காலை பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் ம.தி.மு.க.வை சேர்ந்த பத்மா குழந்தைவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு பேரூராட்சி மன்ற வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்களுக்கு வரவு செலவு கணக்கு நகல்கள் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நகல்கள் வழங்க முடியாது எனவும், வரவு செலவு கணக்குகளை வாங்கி உறுப்பினர்கள் படித்துவிட்டு மீண்டும் ஒப்படைத்து விட்டு செல்லவேண்டும் எனவும் கூறியதாக தெரிகிறது. எங்களுக்கு நகல்கள் கொடுத்தால் மட்டுமே இந்த அரங்கை விட்டு வெளியே செல்வோம் என 5 தி.மு.க. கவுன்சிலர்கள் கூறினர்.

மேலும் கூட்ட அரங்கிலேயே 5 தி.மு.க. கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபால், கொடுமுடி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இரவு 9.30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் வரவு செலவு கணக்கு அறிக்கை நகல்களை பேரூராட்சி செயல் அதிகாரி வசந்தா வழங்கினார். இதனால் 5 கவுன்சிலர்களும் தங்களுடைய உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அந்தியூர், சென்னசமுத்திரம் பேரூராட்சி அலுவலகங்களில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்