கோவை வந்த அந்தமான் கவுன்சிலர்கள்
அந்தமான் கவுன்சிலர்கள் கோவைக்கு வந்தனர். பின்னர் அவர்கள், குப்பைகளை தரம் பிரிப்பதை பார்வையிட்டனர்.
பீளமேடு
அந்தமான் கவுன்சிலர்கள் நேற்று கோவைக்கு வந்தனர். பின்னர் அவர்கள், குப்பைகளை தரம் பிரிப்பதை பார்வையிட்டனர்.
குப்பைகள் தரம் பிரிப்பு
கோவை மாநகராட்சியில் 3,500-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கடைகள், நிறுவனங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 800 முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அவை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அதில் மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது.
அந்தமான் கவுன்சிலர்கள்
இந்த நிலையில், அந்தமான் நகரின் போர்ட் பிளேயர் துறைமுக நகராட்சி தலைவர் கவிதா உதயகுமார் தலைமையில் அந்தமான் கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, லட்சுமி கணேசன், ரவிச்சந்திரன், வெற்றிவேல், பாண்டிசெல்வி, தர்மேந்திர நாராயணன், கருணாநிதி, செல்வ ராணி, உதவி பொறியாளர் வகாப் அடங்கிய 14 பேர் கொண்ட குழு நேற்று கோவை வந்தனர். அவர்களை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் வரவேற்றார்.
இதையடுத்து அந்தமான் கவுன்சிலர்கள், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 27-வது வார்டு பீளமேடு, நவ இந்தியா, எஸ்.டி.வி. நகரில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
குப்பை கிடங்கு
அதைத்தொடர்ந்து அவர்கள், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு சென்று குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளையும் பார்வையிட்டனர்.
அப்போது மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி, உதவி ஆணையாளர் மோகன சுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.