மேலும் ஒரு பெண் உடல் மீட்பு

சுவாமிமலை அருகே ஆற்றில் மூழ்கி மாயமான

Update: 2023-08-06 20:06 GMT

பாபநாசம்:

சுவாமிமலை அருகே ஆற்றில் மூழ்கி மாயமான மேலும் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.

ஆற்றில் மூழ்கினர்

கும்பகோணம் தாலுகா, சுவாமிமலை அருகே உள்ள வளையபேட்டை மல்லப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் மகள் அபிராமி (வயது22). இவருடைய உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த பஞ்சமூர்த்தி மகள்கள் மீரா (23), கீர்த்திகா (20), ரத்தினம் மகன் பாலா (28), சுபாஷ் சந்திரபோஸ் மகன்கள் ஹரிஹரன் (25), சந்தோஷ் (22) ஆகிய 6 பேரும் நேற்று முன்தினம் அருகிலுள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது அவர்களில் அபிராமி மற்றும் மீரா ஆகிய 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கி மாயமானார்கள். இதனை பார்த்து அவர்களுடன் வந்த பாலா,2 பேரையும் காப்பாற்ற முயன்ற போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அப்போது கரையில் இருந்தவர்கள் பாலாவை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் ஒரு பெண் உடல் மீட்பு

இதுகுறித்து சுவாமிமலை போலீசாருக்கும், கும்பகோணம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஆற்றில் இறங்கி தேடி அபிராமி உடலை மீட்டனர். பின்னர் மீராவின் உடலை தேடிய போது கிடைக்கவில்லை. இதனால் விடிய, விடிய தீயணைப்பு படையினர் தேடினர்.

இதை தொடர்ந்து நேற்று மதியம் மீராவின் உடலை மீட்டனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த சுவாமிமலை போலீசார் மீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்