ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பழங்கால சுவர் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பழங்கால சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-07-02 17:28 GMT

ஸ்ரீவைகுண்டம்:

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர். இங்கு 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பல்வேறுகட்ட அகழாய்வுகளுக்கு பின்னர் 120 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிச்சநல்லூரில் தங்கத்தாலான காதணி கடந்த 30-ந்தேதி கண்டறியப்பட்டது. இது தொல்லியல் ஆர்வலர்களை உற்சாகமடைய செய்தது.

இந்த நிலையில் ஆதிச்சநல்லூர்-கால்வாய் ரோடு பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட பழங்கால சுவர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இருபுறமும் விரிந்து செல்வது போன்று அந்த சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே இங்கு நடைபெற்ற அகழாய்வில் சங்க கால நாணயங்கள் கண்டறியப்பட்டன. எனவே பழங்காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்து வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்