ஓமலூர்:-
100 நாள் வேலை திட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட மூதாட்டி திடீரென இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
100 நாள் வேலை
ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ஊராட்சி சின்னவடகம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 78). இவருடைய மனைவி வேடியம்மாள் (75). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்த வேடியம்மாள் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றார். சின்னவடகம்பட்டி ஏரி வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
சோகம்
இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை தூக்கிக்கொண்டு காடையாம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு வேடியம்மாளை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். ஏரி வேலைக்கு சென்ற மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.