அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் மின்சாரம் தாக்கி பலி

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் மின்சாரம் தாக்கி பலி

Update: 2022-11-07 18:45 GMT

குடவாசல் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார். 2 பசுமாடுகளும் இறந்தது.

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தார்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள பருத்திச்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் ரத்தினம்(வயது 67). கூலித்தொழிலாளி இவர் நேற்று முன்தினம் மாலை தனது பசுமாட்டை மேய்ப்பதற்காக அங்குள்ள தோட்டத்திற்கு அழைத்துச்சென்றார்.

மாட்டை அங்கே மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீட்டிற்கு வந்தார். மாலையில் மாட்டை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதற்காக தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அந்த தோட்டத்தில் மின்கம்பி அறுந்து கிடந்ததை பார்க்காமல் அவர் மின்கம்பியை மிதித்துள்ளார்.

முதியவர், பசுமாடு சாவு

இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ரத்தினம் பரிதாபமாக இறந்தார். அதே இடத்தில் மின்சாரம் தாக்கி ஒரு பசுமாடும் இறந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். இதுகுறித்து குடவாசல் போலீசார் மற்றும் தாசில்தாருக்கு தகவல் ெதரிவித்தனர்.

தகவல் அறிந்த தாசில்தார் குருநாதன், ஊராட்சி தலைவர் நாகராஜன் மற்றும் குடவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மின்சாரம் தாக்கி இறந்த ரத்தினம் உடலையும், இறந்த பசுமாட்டையும் கைப்பற்றினர். பின்னர் ரத்தினம் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி முதியவர், பசுமாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆலத்தம்பாடி

முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தண்டாங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி சகுந்தலா. இவர்களது பசுமாடு, ஜாம்புவானோடை ஊராட்சி முன்னாள் ராணுவத்தினர் காலனியில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது பெய்த கனமழை காரணமாக மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனை மிதித்த மாடு மின்சாரம் தாக்கி இறந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்