சத்தியமங்கலம் அருகே தீயில் உடல் கருகி முதியவர் பலி; பீடி பற்ற வைத்தபோது பரிதாபம்

சத்தியமங்கலம் அருகே பீடி பற்ற வைத்தபோது தீப்பிடித்ததில் உடல் கருகி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-08-27 21:56 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே பீடி பற்ற வைத்தபோது தீப்பிடித்ததில் உடல் கருகி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

முதியவர்

சத்தியமங்கலம் அருகே உள்ள கோட்டுவீராம்பாளையம் கைக்கோளர் வீதியைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 82). அவருடைய மனைவி வசந்தா.

இவர்களுக்கு 3 மகள்கள். அனைவரும் திருமணம் ஆனவர்கள். இந்த நிலையில் வசந்தா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வீராசாமி தனியாக வசித்து வந்தார். இதைத்தொடர்ந்து அவரை மகள்கள் அவ்வப்போது சென்று கவனித்து வந்தனர்.

பிணமாக கிடந்தார்

அதேபோல் சம்பவத்தன்று 2-வது மகள் தந்தையை பார்க்க வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த மெத்தை முழுவதும் தீப்பிடித்து எரிந்து கிடந்தது. அதில் வீராசாமி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

உடனே இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

உடல் கருகி பலி

விசாரணையில் வீராசாமி பீடியை பற்ற வைத்துவிட்டு அணைக்காமல் தீக்குச்சியை மெத்தை மீது போட்டதில் அது தீப்பிடித்து எரிந்ததும், பின்னர் மளமளவென பரவிய தீ முதியவர் உடலில் பிடித்து எரிந்ததில் அவர் பரிதாபமாக உடல் கருகி பலியானதும் தெரியவந்தது.

பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீ விபத்தில் முதியவர் உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்