33 முறை கொடுத்த மனுக்களை ஒன்றாக கட்டி தலையில் சுமந்து வந்த முதியவர்

கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் 33 முறை கொடுத்த மனுக்களை ஒன்றாக கட்டி தலையில் சுமந்து முதியவர் வந்தாா்.

Update: 2023-05-22 18:45 GMT

கடலூர்:

திட்டக்குடி அருகே வடகராம்பூண்டியை சேர்ந்த அய்யாசாமி (வயது 65), தான் 33 முறை கொடுத்த மனுக்களின் நகல்களை கட்டுகளாக கட்டி, தலையில் வைத்து சுமந்தபடி நெற்றியில் பட்டை நாமம் இட்டு மனு அளிக்க கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். பின்னர் அவர், கலெக்டர்(பொறுப்பு) ராஜசேகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் எனது நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்வதற்காக மனு அளித்திருந்தேன். அதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர், அந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கேட்கிறார். இதற்கு வருவாய் துறையினரும் உறுதுணையாக உள்ளனர்.

மேலும் அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 33 முறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்