டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உடல் கருகி பலி
பொதட்டூர்பேட்டை அருகே டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி செய்த போது மின்சாரம் தாக்கி ஊழியர் பரிதாபமாக செத்தார்.
பொதட்டூர்பேட்டை,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே காக்களூர் காலனியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). இவர் பொதட்டூர்பேட்டை மின் நிலையத்தில் ஒயர்மேன் ஆக பணியாற்றி வருகிறார். நேற்று பொதட்டூர்பேட்டை பகுதியில் மின்சார பழுது ஏற்பட்டதாக ஏழுமலைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் தன்னுடன் பணியாற்றும் வெங்கடேசன் (42) என்பவரை அழைத்துக் கொண்டு பொம்மராஜூபேட்டை மின் நிலையம் பின்புறம் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மருக்கு நேற்று மாலை சென்றார். அப்போது மின்சாரம் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற நினைப்பில்லாமல் அவசரத்தில் அவர் ஏணி போட்டு மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததால் அவர் அதே இடத்தில் உடல் கருதி பரிதாபமாக செத்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று மின்சார டிரான்ஸ்பார்மரை மின் நிறுத்தம் செய்து இறந்த ஏழுமலையின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஏழுமலைக்கு சுதா (35) என்ற மனைவியும், ஆகாஷ் (24) என்ற மகனும், அபிதா (22) என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மின்சார டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி தொங்கிக் கொண்டிருந்த ஏழுமலையின் உடலை கீழே இறக்க விடாமல் உறவினர்கள் மறியல் செய்தனர். ஏழுமலையை மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறச் சொல்லி யார் உத்தரவிட்டது? அவருக்கு துணையாக சென்றவர் எங்கே? என்பது போன்ற கேள்விகளை கேட்டு மின்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு அவர்களை போலீசாரும், மின்சார துறை அதிகாரிகளும் சேர்ந்து சமாதானப்படுத்திய பிறகு ஏழுமலையின் உடலை மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து கீழே இறக்கினார்கள். இந்த மறியல் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அதன் பிறகு ஏழுமலையின் பிணம் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.