மேம்பாலத்தில் சென்ற மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வடமதுரை அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதை ஓட்டிவந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2022-08-19 15:23 GMT

மின்சார ஸ்கூட்டர்

திண்டுக்கல்லை சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 33). இவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அவர் தனது மின்சார ஸ்கூட்டரில் நிதி நிறுவனத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் திண்டுக்கல் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை அருகே அய்யலூர் மேம்பாலத்தில் வந்தபோது, அவரது மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி பகுதியில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அருள்ஜோதி, உடனடியாக ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சிறிது தூரம் ஓடிவிட்டார். இதற்கிடையே அந்த ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அருள்ஜோதி செய்வதறியாது திகைத்து நின்றார். சிறிது நேரத்தில் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து சாம்பலானது.

வைரலாகும் வீடியோ

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்கூட்டரில் இருந்து புகை வருவதை கண்டு அருள்ஜோதி சுதாரித்துக்கொண்டதால் இந்த விபத்தில் இருந்து அவர் உயிர் தப்பினார்.

இதற்கிடையே ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அய்யலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்