நீலவானுக்கான தூயக்காற்று பன்னாட்டு தினத்தையொட்டி விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணி
நீலவானுக்கான தூயக்காற்று பன்னாட்டு தினத்தையொட்டி விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு தினத்தை யொட்டி நேற்று காலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இப்பேரணியின் முக்கிய நோக்கம், பரந்து விரிந்த இச்சமுதாயத்தில் காற்று மாசுபடுவதை தவிர்த்து சுத்தமான காற்றினை ஏற்படுத்துவதே ஆகும். நாம் உயிர் வாழ்வதற்கு இன்றிமையாததாக கருதப்படுவது தூய்மையான இயற்கை காற்றாகும். அத்தகைய காற்று மாசுபடாமல் இருந்திடும் வகையில் பொதுமக்கள், மாணவ- மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடத்தப்படுகிறது என்றார்.
இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்குமுனை சந்திப்பு அருகில் நிறைவடைந்தது. இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்று காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.