ரெயில்வே கேட்டில் ஆட்டோ மோதியதால் பரபரப்பு

நெல்லை டவுன் ரெயில்வே கேட்டில் லோடு ஆட்டோ மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-14 19:02 GMT

நெல்லை டவுன் ரெயில்வே கேட்டில் லோடு ஆட்டோ மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டை ரெயில்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சேரன்மாதேவி, அம்பை, கடையம் வழியாக செல்லக்கூடிய செங்கோட்டை ரெயில் நெல்லை டவுன் குறுக்குத்துறை செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்து செல்லும். இந்த ரெயில் நேற்று மாலையில் 6.15 மணிக்கு வழக்கம் போல் சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது டவுன் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த வழியாக டவுன் பகுதியை சேர்ந்த தமிழ்ராஜ் என்பவர் ஓட்டிச்சென்ற லோடு ஆட்டோ, ரெயில்வே கேட் அடைக்கும் முன்பு சென்றுவிட முயன்றார். ஆனால் ஆட்டோவில் இருந்த கட்டில், ரெயில்வே கேட்டில் மோதி சேதமடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கேட் கீப்பர் கணேசன் உள்ளிட்டவர்கள் ரெயில் வரும் முன்பு உடனடியாக அந்த சேதமடைந்த கேட்டை தண்டவாளத்தின் ஓரத்திற்கு தள்ளி கொண்டு சென்றனர். அதன்பின்னர் ரெயில் வந்தது. கேட் கீப்பரின் துரித நடவடிக்கையால் ரெயில் தாமதம் இன்றி செங்கோட்டை நோக்கி சென்றது.

இதனை அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஸ்வினி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தொடர்ந்து ஆட்டோ டிரைவரான தமிழ்ராஜிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்