திருமருகலுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
நாகை மற்றும் காரைக்காலில் இருந்து திருமருகலுக்கு கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
நாகை மற்றும் காரைக்காலில் இருந்து திருமருகலுக்கு கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் அவதி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 209 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் இங்கிருந்து பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் திருமருகலில் இருந்து நாகை, திருவாரூர், காரைக்காலுக்கு சென்று வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போதுமான பஸ் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
எனவே நாகையில் இருந்து நாகூர், கொட்டாரக்குடி, சோழங்கநல்லூர், குறும்பேரி, கீழத்தஞ்சாவூர், பெரிய கண்ணமங்கலம், கரம்பை, நெய்க்குப்பை, மருங்கூர் வழியாக திருமருகலுக்கும், திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி, வைப்பூர், சோழங்கநல்லூர், கீழத்தஞ்சாவூர், மேலப்பூதனூர், நத்தம், அரிவிழிமங்கலம், மருங்கூர் வழியாக திருமருகலுக்கும் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
மேலும் காரைக்காலில் இருந்து நிரவி, பத்தம், பனங்காட்டூர், அகரக்கொந்தகை, வாழ்மங்கலம், திட்டச்சேரி வழியாக திருமருகலுக்கு கூடுதலாக பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.