வருகிற 31-ந் தேதிக்குள் பதிவை புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை வழங்கப்படும்-வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் வருகிற 31-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவை புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-07-26 14:17 GMT

நாமக்கல்:

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 83 ஆயிரத்து 338 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்த தேதியின் அடிப்படையில், விவசாயிகளுக்கு 11 தவணை வரை தொகைகள் விடுவிக்கப்பட்டு உள்ளன. தற்போது விவசாயிகள் 12-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் விவரங்கள் சரிபார்ப்பு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 36 ஆயிரத்து 750 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 46 ஆயிரத்து 588 விவசாயிகள் வருகிற 31-ந் தேதிக்குள் இ.கே.ஒய்.சி. முறையில் ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

31-ந் தேதி கடைசிநாள்

பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்திட தங்களது ஆதார் அட்டையுடன் இ-சேவை மையத்தையோ அல்லது கிராம தபால் அலுவலர்களையோ அணுகி, தங்களது விரல் ரேகை மூலம் பதிவு செய்து புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்த முறையில் பாரத பிரதமரின் கவுரவ நிதி திட்ட விவசாயிகள் தங்கள் ஆதார் எண் விவரங்களை வருகிற 31-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைத்திடும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்