அம்மன் கோவில் கோபுரத்தில் தீப்பிடித்தது

சிவகாசியில் பட்டாசு வெடித்த போது அம்மன் கோவில் கோபுரத்தில் தீப்பிடித்தது.

Update: 2022-11-20 19:23 GMT

சிவகாசி, 

சிவகாசியில் பட்டாசு வெடித்த போது அம்மன் கோவில் கோபுரத்தில் தீப்பிடித்தது.

கோபுரத்தில் தீ

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6 மாதங்களாக கும்பாபிஷேகத்துக்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் கோபுரம் முழுவதும் பிளாஸ்டிக் கவர்களை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை அந்த வழியாக சுபநிகழ்ச்சிக்காக சீர் கொண்டு சென்றவர்கள் பேன்சி ரக பட்டாசுகளை வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு சில பட்டாசுகள் கோபுரத்தின் மீது சுற்றப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்கள் மீது விழுந்து வெடித்து சிதறின.

1 மணி நேர போராட்டம்

இதில் தீ மளமளவென கோபுரம் முழுவதும் பரவியது. மேலும் அதில் கட்டப்பட்டு இருந்த மரக்கட்டைகளிலும் தீப்பிடித்தது. இதனால் தீ கோவில் கோபுரத்தில் கொளுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்த உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கோவிலுக்குள் சென்று கோபுரத்தின் மீது ஏறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ேமலும் இந்த சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பக்தர்கள் அதிர்ச்சி

கோவில் கோபுரத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் சிவகாசி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்