உடல்நலம் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை 1 மணி நேரத்தில் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்
கோத்தகிரியில் இருந்து கோவைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை 1 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் கொண்டு வந்தார். ேபாக்குவரத்து நெரிசலில் சிக்காமல் ஆம்புலன்ஸ் செல்ல 8 ஆம்புலன்சுகள் அணிவகுத்து சென்றன.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து கோவைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை 1 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் கொண்டு வந்தார். ேபாக்குவரத்து நெரிசலில் சிக்காமல் ஆம்புலன்ஸ் செல்ல 8 ஆம்புலன்சுகள் அணிவகுத்து சென்றன.
குழந்தைக்கு மூச்சுத்திணறல்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாந்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரன் (வயது 29). இவரது மனைவி தன்யா. கர்ப்பிணியான அவர் பிரசவத்திற்காக கோத்தகிரி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அந்த ஆஸ்பத்திரியில் சிறப்பு வசதிகள் இல்லாததால், உடனடியாக கோவையில் உள்ள குழந்தைகள் சிறப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்குமாறு குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோத்தகிரியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அக்கீம் என்பவர் ஆம்புலன்சில் குழந்தை, பவித்ரன், அவரது மனைவி, உறவினர் ஒருவர் மற்றும் செவிலியர் ஒருவரை அழைத்துக் கொண்டு இரவு 7.05 மணிக்கு கோத்தகிரியில் இருந்து புறப்பட்டார்.
அணிவகுத்த ஆம்புலன்சுகள்
மேட்டுப்பாளையம் ஓடந்துறை அருகே செல்லும் போது ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. உடனடியாக அக்கீம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 5 பேர் தங்களது ஆம்புலன்சுகளை எடுத்துக் கொண்டு வந்தனர். தீவிர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் குழந்தை இருந்த ஆம்புலன்ஸ் முன்பு 3 ஆம்புலன்சுகளும், பின்னால் 2 ஆம்புலன்சுகளும் சைரன் ஒலி எழுப்பி அணிவகுத்து சென்றன.
மேலும் போலீசார் சிக்னல்களில் வாகனங்களை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். மேலும் அவர்கள் இதுகுறித்து கோவையில் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து பைலட் ஆம்புலன்சுகளாக சென்ற 5 ஆம்புலன்சுகள் காரமடை வரை கொண்டு சென்று விட்டனர்.
நெரிசலில் சிக்காமல் சென்றது
அதன் பின்னர் அக்கீம் ஆம்புலன்சை வேகமாக ஓட்டி சென்றார். தொடர்ந்து கோவில்பாலையம், சரவணம்பட்டி பகுதிகளில் இருந்து வந்த 3 ஆம்புலன்சுகள், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குழந்தையை சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சுடன் அணிவகுத்து சென்றன. பிற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குழந்தையுடன் சென்ற ஆம்புலன்ஸ் கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்றது.
ஆனால், அங்கிருந்து வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பச்சிளம் குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கோத்தகிரியில் இருந்து கோவைக்கு செல்ல 85 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. வழக்கமாக காரில் செல்ல 2 மணி நேரம் ஆகும். ஆனால், இரவு 8.13 மணிக்கு கோவைக்கு கொண்டு சென்று (அதாவது 68 நிமிடங்களில்) குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் அக்கீமுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மேட்டுப்பாளையம், கோவையை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், போலீசாருக்கு பொதுமக்கள், குழந்தையின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.
காப்பாற்ற வேண்டும்
இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் அக்கீம்:-
நான் கடந்த 17 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளேன். எனக்கு வேலை நேரம் என எதுவும் இல்லை. இரவு, பகல் என எப்போது வேண்டுமானாலும் அழைப்பார்கள். உடனடியாக செல்ல வேண்டும். மலைப்பகுதியான நீலகிரி மாவட்டத்தில் விபத்துகள் ஏற்படும் போது காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை பள்ளங்களில் இருந்து செங்குத்தான பகுதிக்கு சுமந்து செல்ல வேண்டி இருக்கும்.
அப்போது எங்களுக்கு அந்த சிரமம் தெரியாது. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கும். பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை காப்பாற்ற சக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி தந்த போலீசாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரது முயற்சியால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது மனதிற்கு திருப்தி அளிக்கிறது.