செம்மாண்டப்பட்டி ஏனாதி பகுதியில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 25 பேர் கைது

செம்மாண்டப்பட்டி ஏனாதி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-19 20:08 GMT

ஓமலூர்,

அம்பேத்கர் சிலை

ஓமலூர் அடுத்த செம்மாண்டப்பட்டி ஊராட்சி ஏனாதி காலனியில் சின்னதிருப்பதி செல்லும் சாலையோரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி அம்பேத்கர் சிலையை அந்த பகுதி பொதுமக்கள் வைத்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், காடையாம்பட்டி தாசில்தார் அருள் பிரகாஷ் மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

சிலை வைப்பதற்கு உரிய அனுமதி வாங்கவில்லை என்பதை அறிந்து உடனடியாக சிலையை அகற்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த தகவல் கிராமத்தில் காட்டுத்தீ போல் பரவியது. உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு துணைச்செயலாளர் பாவேந்தன், மாவட்ட செயலாளர் வசந்த், இளஞ்சிறுத்தைகள் பாசறை அமைப்பாளர் சாமுராய் குரு மற்றும் கட்சியினர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

25 பேர் கைது

மேலும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் சிலையை சுற்றிலும் அமர்ந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியதால், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கீதா, இளமுருகன், விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேச பெருமாள், ஆனந்தகுமார் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு துணைச்செயலாளர் பாவேந்தன், மாவட்ட செயலாளர் வசந்த், நிர்வாகிகள் மெய்யழகன், சாமுராய் குரு, ஆறுமுகம், மணிக்குமார் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து அம்பேத்கர் சிலை கிரேன் மூலம் கயிறு கட்டி எடுத்து சரக்கு வேனில் வைக்கப்பட்டு மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிர்வாகி மீது தாக்குதல்?

இதனிடையே சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றி சேலம் கொண்டு செல்லப்பட்டவர்கள் பின்னர் சங்ககிரி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் தனித்தனியாக பிரித்து திருமண மண்டபங்களில் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த மாவட்ட இளஞ்சிறுத்தை பாசறை அமைப்பாளர் சாமுராய் குரு தன்னை போலீசார் தாக்கியதாக கூறி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

கொளத்தூர்

செம்மாண்டப்பட்டி ஏனாதி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கொளத்தூர் பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அம்மாசி மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் அனுமதியின்றி நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்