ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் தேரோட்டம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Update: 2022-06-11 16:52 GMT

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஆதிநாதர் ஆழ்வார் கோவில்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் நவத்திருப்பதி தலங்களில் 9-வது தலமாக அமைந்துள்ளது ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில். இக்கோவிலில் சுவாமி நம்மாழ்வார் அவதாரம் செய்த வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரமோற்சவ விழா நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை நம்மாழ்வார் திருவீதி உலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 5-ம் திருநாள் கடந்த 7-ந் தேதி காலையில் மங்களாசாசனம் மற்றும் இரவில் 9 பெருமாள்களின் கருடசேவை நடந்தது.

தேரோட்டம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக சுவாமி நம்மாழ்வார் காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். காலை 8.30 மணிக்கு பக்தர்களால் வடம் பிடித்து தேர் இழுக்கப்பட்டது. மேல ரதவீதியில் புறப்பட்டு வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக சென்று நிலையத்தை தேர் வந்தடைந்தது. தேரோட்டத்தின் போது 'கோவிந்தா கோபாலா' என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 10-ம் திருநாளன இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்