நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றியை தடுக்க முடியாது

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றியை தடுக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

Update: 2023-09-17 18:04 GMT

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றியை தடுக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

தி.மு.க. முப்பெரும் விழா

வேலூரில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

இந்த விழாவில் நிறைவுரையாக, அறிவுரையாக, வீர உரையாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார். வேலூரில் முப்பெரும் விழா நடத்த அனுமதி வழங்கிய அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு முப்பெரும் விழா மட்டுமல்ல தி.மு.க.வின் பவளவிழாவும் சேர்த்து நடைபெறுவதே கூடுதல் பெருமையாகும்.

நாங்கள் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடாற்காடு மாவட்டமாக உள்ளோம். நிலத்தில் எல்லையில் கோடு இருந்தாலும், எங்கள் மனதில் எந்தவித பிரிவினை கோடும் இல்லை. நாங்கள் வடாற்காடு என்று பெருமையாக கூறுவோம்.

இந்தியாவிலேயே இந்த மாவட்டத்திற்கு சிறப்பான பெருமை உண்டு. இந்திய சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனுக்கு எதிராக முதல் குரல் கொடுத்த மாவட்டம் வேலூர். சுதந்திரத்திற்காக முதல் கோரிக்கை இங்குதான் எழுந்தது. அதன் பிறகு தான் வெள்ளைக்காரர்களை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு மற்றவர்களுக்கு வந்தது. இதனால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை வரலாறு நமக்கு கூறுகிறது.

திப்பு சுல்தான் மறைவும், வீரபாண்டிய கட்டபொம்மனின் உறவினர்களும் கொல்லப்பட்டதும் இந்த வேலூர் கோட்டையில் தான் நடந்தது.

இங்கு விருது பெரும் சத்தியசீலன் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு முதல் தோல்வியை கொடுத்தவர். இவர் போன்று இங்கு விருது பெறுபவர்கள் அந்த விருதுக்கு சொந்தக்காரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மாவட்டம் இல்லை என்றால் தி.மு.க. பிறந்திருக்காது.

பாராட்டும் கட்சி

தி.மு.க. என்ற கழகம் உருவாகி இருக்காது. ஏனென்றால் பெரியார் இங்கு வந்தார், தொண்டு பணிக்காக மணியம்மையை அழைத்துச் சென்றார். இதையடுத்து தான் அண்ணாதுரை தி.மு.க.வை உருவாக்கினார். பெரியார் மணியம்மையை திருமணம் செய்யாவிட்டால் தி.மு.க. வந்திருக்காது. எனவே தி.மு.க. உருவாவதற்கு வேலூர் தான் காரணம்.

கட்சிக்காக உழைத்தவர்களை பாராட்டும் கட்சி தி.மு.க. வேலூரில் உள்ள காந்தி சிலையை யார் திறப்பது என்று பிரச்சினை இருந்தபோது அண்ணா தான் அதை திறந்தார்.

தி.மு.க.வின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் நமது மாவட்டம் முன்னிலையில் இருந்துள்ளது என்பது மிகப்பெரிய வரலாற்று உண்மை. இந்த நேரத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் ஒருவர் மறைந்தால் அவரது கட்சியும் மறைந்துவிடும் என்பார்கள். ஆனால் பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பின்னர் கட்சியை வளர்த்தவர் கலைஞர். அவருக்கு பின்னால் மு.க.ஸ்டாலின் கட்சியை வளர்த்துள்ளார்.

கலைஞர் மகனுக்கு தைரியம்

அனுபவம் இல்லாத ஸ்டாலின் இயக்கத்தை வழிநடத்த முடியுமா? என்று நினைத்தார்கள். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று அவரது திறமையை வெளிக்காட்டி உள்ளார்.

அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வை புற முதுகிட்டு ஓட வைத்து முதல்-அமைச்சராக அமர்ந்தவர் மு.க.ஸ்டாலின். 2 கோடி பேரை உறுப்பினராக கொண்டு இந்த கழகம் வீறு கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு மு.க.ஸ்டாலின், அவரது தந்தையிடம் பெற்ற பாடமே.

கொரோனா காலக்கட்டத்தில் கூட மருத்துவமனைக்கு எந்தவித அச்சமும் இன்றி சென்று ஆய்வு செய்தார். அந்த தைரியம் கலைஞரின் மகனுக்கு மட்டுமே உள்ளது. மக்கள் வாழ உழைக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் நமக்கு கிடைத்துள்ளார்.

இந்த இயக்கத்தை எந்தெந்த வழியில் வளைக்கலாம் என்று பார்க்கின்றனர். எமர்ஜென்சி காலத்தையே பார்த்த இயக்கம் தி.மு.க. நமது கட்சியை ஒழிக்க பார்த்தனர். வீர வரலாறு கொண்ட இயக்கத்திற்கு வேலூரில் முப்பெரும் விழா நடத்தும் பெருமை நமக்கு கிடைத்துள்ளது.

வெற்றியை தடுக்க முடியாது

நாடாளுமன்ற தேர்தல் தனித்து வந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலோடு சேர்ந்து வந்தாலும் சரி, இன்னும் கூட சொல்லப்போனால் உள்ளாட்சி தேர்தலும் சேர்ந்து வைத்தாலும் சரி, எத்தனை பட்டாளத்தை கூட்டி வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்க முடியாது. வெற்றியை தடுக்க முடியாது.

தி.மு.க.வோடு மோத வேண்டும் என்றால் ஒரு முறை அல்ல இரு முறை யோசித்து மோத வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்