நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அய்யப்ப பக்தர்கள் நீராடி மகிழ்ந்தனர்.

Update: 2022-11-19 18:45 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். அப்போது தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்வர். இதேபோல் சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் காலமான கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் புனித நீராடி விட்டு செல்வார்கள்.

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததால் அருவிகளில் நேற்று நீர்வரத்து சீரானது. இதனால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கூட்டம், கூட்டமாக வந்து அருவிகளில் நீராடி மகிழ்ந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக, களக்காடு தலையணையில் கடந்த 5-ந்தேதி தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அன்று முதல் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து கடந்த 11-ந்தேதி முதல் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்பிறகு மழையின் காரணமாக தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கடந்த 16-ந்தேதி முதல் மீண்டும் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது வெள்ளம் தணிந்ததால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக வனச்சரகர் பிரபாகரன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்