கொடைக்கானல் மலைக்கிராமங்களில் சாலை அமைக்க ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு

கொடைக்கானல் மேல்மலைக்கிராமங்களில் சாலை அமைக்க ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-06-19 16:42 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. ராஜா தலைமை தாங்கினார். கொடைக்கானல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு:-

கவுஞ்சி கிராமத்துக்கு தார் சாலை அமைக்க வேண்டும். பொது கழிப்பறை கட்ட வேண்டும். குப்பைகளை அகற்ற வேண்டும். சாலையோரங்களில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும். நிலங்களை அளப்பதற்கு நில அளவை துறையினர் தாமதம் செய்யக்கூடாது. வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

கூடுதல் பஸ்கள்

பெருமாள்மலை பிரகாசபுரம் பகுதியில் உள்ள குப்பைக்குழியில் துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும். இறந்த விலங்குகளை முறைப்படி புதைக்க வேண்டும். தாண்டிக்குடி பகுதியில் இ-சேவை மையம் தொடங்க வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

பள்ளங்கி கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மலைக்கிராமங்களில் சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும். மாணவ-மாணவிகளின் நலன் கருதி வில்பட்டி, பள்ளங்கி கிராமங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அடிசரை கிராமத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கூக்கால் கிராமத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனுக்களை கொடுத்தனர்.

ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு

விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசுகையில், விவசாயிகள் அளித்துள்ள அனைத்து மனுக்கள் கவனமாக பரிசீலிக்கப்படும். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் இருந்து கிளாவரை வரை சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 7 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கும். மேலும் கொடைக்கானல் பகுதியில் சாலையோரத்தில் உள்ள மரங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 210 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக, அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன், தாசில்தார் முத்துராமன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த், நகராட்சி மேலாளர் மீனா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரதன், மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், வனச்சரகர் சிவக்குமார், போக்குவரத்து துறை கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்