அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்த ரூ.5¾ கோடி நிதி ஒதுக்கீடு

பந்தலூரில் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்த ரூ.5¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-05-28 23:00 GMT

பந்தலூர்

பந்தலூரில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினமும் பந்தலூர், மேங்கோரேஞ்ச், சேரங்கோடு, சேரம்பாடி, எருமாடு, தாளூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, பொன்னானி, குந்தலாடி, பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, கரியசோலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால், ஆஸ்பத்திரியில் போதிய கட்டிட வசதிகள் இல்லை. மேலும் டாக்டர்கள் காலி பணியிடங்கள் உள்ளது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரி கடந்த பல ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக நல அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனுக்கள் அனுப்பினர். இந்தநிலையில் நீலகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குனர் பழனிசாமி பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.5¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு விரைவில் புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின் போது முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி மற்றும் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்