நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ.238 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் முதற்கட்டமாக திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ.238 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என உணவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2022-09-22 18:45 GMT

நீடாமங்கலம்:

தமிழகத்தில் முதற்கட்டமாக திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ.238 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என உணவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

உணவுத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கொள்முதலுக்கு கொண்டு வரப்பட்ட நெல்லை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து கோவில்வெண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை பார்வையிட்டு அலுவலக நடைமுறைகள் மற்றும் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அலுவலர் சுஜாதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக செயற்பொறியாளர் குணசீலன், உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

பேட்டி

பின்னர் உணவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த ஆண்டு குறுவை சாகுபடி சராசரி அளவினை விட கூடுதலான பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது.் மத்திய அரசின் உத்தரவுப்படி நல்ல ரகம் ரூ.2,160-க்கும், சன்ன ரகம் ரூ.2060-க்கும், பொது ரகம் ரூ.2115-க்கும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

வருங்காலங்களில் திறந்தவெளி நெல்கொள்முதல் நிலையங்களை தவிர்த்து சேமிப்பு கிடங்கு அமைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ரூ.238 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் முதற்கட்டமாக திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ.238 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக நவீன அரவை ஆலைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக தார்ப்பாய்கள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் கடன் அளிக்கக்கூடிய வங்கிகளாக மட்டும் செயல்படாமல் இ-சேவை மையங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொருளாதார கட்டமைப்புகள் அமைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

27,485 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அங்காடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்த துறை ரீதியாக திட்டமிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அரிசி கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

அனைத்துதுறை குழு முயற்சியின் அடிப்படையில் இதுவரை ரூ.11.31 கோடி மதிப்பிலான 27,485 டன் ரேஷன் அரிசியும், 27,814 லிட்டர் மண்எண்ணெய்யும், 1,889 சமையல் கியாஸ் சிலிண்டரும் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2,088 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 11,008 வழக்குகள் பதியப்பட்டு 11,121 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி தேவையான அளவு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

குடவாசல்

இதையடுத்து குடவாசல் புதுக்குடியில் ரூ. 4.75 கோடியில் 4,500 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிமற்றும் மஞ்சக்குடியில் பொது வினியோகத் திட்ட அங்காடி ஆகியவற்றை உணவுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்