அவலாஞ்சி மீன் பண்ணையை நவீனப்படுத்த ரூ.2½ கோடி ஒதுக்கீடு

அவலாஞ்சி மீன் பண்ணையை நவீனப்படுத்த ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

Update: 2023-02-07 18:45 GMT

ஊட்டி, 

அவலாஞ்சி மீன் பண்ணையை நவீனப்படுத்த ரூ.2½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2½ கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ள அவலாஞ்சி டிரவுட் மீன்குஞ்சு பொரிப்பகம் மற்றும் பண்ணையை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மீன் வளர்ப்பு முறை குறித்து கேட்டறிந்து, அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கேற்ப தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் டிரவுட் மீன்குஞ்சுகளை இருப்பு வைத்து வளர்த்தெடுக்க 1863-ம் ஆண்டு பிரான்சிஸ் என்ற மீன்வள ஆராய்ச்சியாளரால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 1907-ம் ஆண்டு ஆராய்ச்சியாளர் ஹென்றி சார்ல்டன் வில்சன் என்பவரால் டிரவுட் மீன்குஞ்சு பொறிப்பகம் மற்றும் வளர்ப்பு பண்ணை தொடங்கப்பட்டது. இங்கு டிரவுட் மீன்களில் இருந்து முட்டைகளை எடுத்தல், முட்டைகளில் இருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்தல், மீன் குஞ்சுகளை வளர்த்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நவீனமயமாக்க நடவடிக்கை

ஆண்டுக்கு 60,000 முதல் 70,000 எண்ணிக்கையில் டிரவுட் மீன்குஞ்சுகள் வளர்த்தெடுக்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பெய்த கனமழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவலாஞ்சி டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம் சேதமடைந்தது. பின்னர் ரூ.10 லட்சத்தில் பழுது பார்க்கப்பட்டது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோக்கர்நாக் டிரவுட் மீன் பண்ணையில் இருந்து 20 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, அவலாஞ்சி பொரிப்பகத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் இணைப்பு பாலம் ரூ.17.22 லட்சம் மதிப்பிலும், தடுப்பணை ரூ.32 லட்சம் மதிப்பிலும், வடிகால் ரூ.43 லட்சம் மதிப்பிலும், தடுப்புச்சுவர் ரூ.34.93 லட்சம் மதிப்பிலும், 5 மீன் வளர்ப்பு குளம் ரூ.18.79 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன்பண்ணையை நவீன மயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் (மீன்வளத்துறை) ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் (பவானிசாகர்) கதிரேசன், குந்தா தாசில்தார் இந்திரா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்