ரூ.40ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்
பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக முதல்-அமைச்சர் ரூ.40ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
திருப்பத்தூர்
பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக முதல்-அமைச்சர் ரூ.40ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் திருப்பத்தூர் அருகே தி.புதுப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது:- முதல்-அமைச்சர் பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கல்வித்துறையில் திகழ்ந்து வருகிறார். அனைத்து பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் இணைந்து அரசிற்கு வலுசேர்த்து வருகின்றனர்.
ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள், கொடையாளர்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது பெருமைக்குரிய செயலாகும். அதுமட்டுல்லாமல் பள்ளிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட பல்வேறு தன்னார்வலர்களும் அரசுடன் இணைந்து தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அதில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் மட்டுமல்லாமல் அவர்கள் படிப்பதற்காக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார். இதை மாணவர்கள் கருத்தில் கொண்டு படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு மற்றும் கலைகளில் சிறந்து விளங்கி பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பரிசு
விழாவில் தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற 8-ம் வகுப்பு மாணவர்கள் 24 பேருக்கும், தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 9-ம் வகுப்பு 17 மாணவர்களுக்கும் அமைச்சர் பெரியகருப்பன் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் குழுவிற்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.5 ஆயிரத்தை அமைச்சர் வழங்கினார்.
விழாவில் பங்களிப்பு நன்கொடையாளர் சிங்கப்பூர் தொழிலதிபர் துவார் சந்திரசேகர், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாநாராயணன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) சந்திரகுமார், பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனிசெந்தில்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, சி.கே.ஆர். நிறுவனங்களின் இயக்குனரும், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளருமான நெடுமரம் இளங்கோவன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.