நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடரும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
கரும்பு கொள்முதல்
திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு இந்த ஆண்டு கரும்பை கொள்முதல் செய்யாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்பை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. எனவே இந்த ஆண்டு கரும்பை கண்டிப்பாக கொள்முதல் செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது.
சட்டசபை சிறப்பு கூட்டம்
புதுக்கோட்டை அருகே ஆதிதிராவிடர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது, சேலத்தில் ஆதிதிராவிடர்களுக்கு கோவிலில் வழிபாடு மறுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் சாதி ரீதியான பிரச்சினை தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
எனவே சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிக்க வேண்டும்.
யாருக்காக இந்த திட்டங்கள்?
பரந்தூர் விமான நிலையம் அமைக்கவும், தொழிற்சாலைகள் அமைக்கவும் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் பணி தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. தொழிற்சாலைகள், விமான நிலையம் எல்லாம் தேவைதான். ஆனாலும் விவசாயிகளை, அகதிகளின் நிலைக்கு உருவாக்கி விட்டு யாருக்காக இந்த திட்டங்கள் என்று தெரியவில்லை.
ஆதிதிராவிட பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு நிதி முறையாக செலவிடப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். அதில் நிறைய ஊழல் மற்றும் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. எனவே தவறு செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க. தலைமையில் கூட்டணி
வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி கண்டிப்பாக தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நாகைமாலி எம்.எல்.ஏ., கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.