வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி வாக்காளர்கள் திடீர் சாலை மறியல்

வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி வாக்காளர்கள திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-27 21:29 GMT

வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி வாக்காளர்கள திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 77 பேர் போட்டியிட்டதால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 5 வைக்கப்பட்டு இருந்ததால் வாக்காளர்கள் ஓட்டு போட்டாலும் பீப் சத்தம் கேட்க காலதாமதம் ஆனது.

எனவே வாக்குப்பதிவும் சற்று தாமதம் ஆனது. இதன் காரணமாக வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். காத்திருந்த வாக்காளர்களுக்கு தேவையான அளவு சாமியானா பந்தல்கள் போடப்படாததால், ஏராளமானவர்கள் வெயிலில் காத்திருக்க வேண்டியது இருந்தது. நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. காலை 8 மணியில் இருந்தே வெயில் அடித்ததால் பலரும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் பகல் 12 மணி அளவில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வரிசையில் காத்திருந்தபோதே லேசான மயக்கம் அடைந்தார். அதைப்பார்த்த வாக்காளர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

சாலைமறியல்

அங்கு வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினரும் வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சாமியான பந்தல் போதிய அளவு இல்லை. குடிதண்ணீர் வசதி இல்லை. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை அழைத்துச்செல்ல சக்கர நாற்காலி வசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார்கள் கூறினார்கள். அனைத்தையும் சரி செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து கூடுதலாக துணை ராணுவப்படையினர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்