மிரட்டல், மோசடி குற்றச்சாட்டுகள்- வராகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வராகியை குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்தார்

Update: 2024-09-24 18:37 GMT

சென்னை,

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற வராகி(வயது 50). ரூ.5 லட்சம் கேட்டு சார்-பதிவாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மயிலாப்பூர் போலீசார் வராகியை கடந்த 13-ந் தேதி கைது செய்தனர்.

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இந்தநிலையில் அவர் மீது மிரட்டல், மோசடி குற்றச்சாட்டுகளை கூறி 40-க்கும் மேற்பட்ட நபர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். சைதாப்பேட்டையைச் சேர்ந்த அருமைசெல்வம் என்பவர், நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்து விட்டதாக வராகி மீது ஒரு புகார் மனுவை கொடுத்தார்.

அதுதொடர்பாக ஐகோர்ட்டு போலீசார் 2-வதாக வராகி மீது ஒரு வழக்கு பதிவு செய்தனர். எம்.கே.பி.நகரைச் சேர்ந்த பாரதி என்பவர் கொடுத்த புகாரில் சமையல் கியாஸ் ஏஜென்சி வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்தை வாங்கி விட்டு வராகி மோசடி செய்து விட்டார் என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக எம்.கே.பி.நகர் போலீசார் வராகி மீது 3-வது ஒரு வழக்கை பதிவு செய்தனர். இந்தநிலையில் வராகியை குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்தார்.மேற்கண்ட தகவல்கள் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்