கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் 120 கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இந்த கிராமங்களில் நாளை (வியாழக்கிழமை) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாயிகள் பயனடையும் பொருட்டு, பல்வேறு விவசாயம் சார்ந்த துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
வண்டல் மண்
இந்த முகாமில் குளத்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறுதல், பயிர் கடன் வழங்க விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறுதல், பயிர் காப்பீடு குறித்து விளக்குதல், கால்நடைகள் நலம் பேண சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்களில் பயனாளிகள் தேர்வு செய்தல் உள்ளிட்ட விவசாய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. கிராம விவசாயிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.