கல்லறை திருநாள் அனுசரிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப் பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு முன்னோர் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.

Update: 2022-11-02 18:36 GMT

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப் பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு முன்னோர் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.

கல்லறை திருநாள்

கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது உறவினர்களை நினைவு கூர்ந்து வழிபடும் கல்லறை திருநாள் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்தது. முன்னதாக கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர் நினைவிடத்தை தூய்மைப்படுத்தி பூமாலை அணிவித்து வணங்கி வழிபட்டனர்.திருவாரூர் நெய்விளக்கு தோப்பு கிறித்துவ கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் நடந்தது. புனித அன்னை பாத்திமா ஆலயத்தில் பங்கு தந்தை ஜெரால்டு சூசை தலைமையில் கல்லறை திருநாள் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களை விட்டு பிரிந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களது நினைவிடத்தை சுத்தம் செய்து பூக்களை பரப்பி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். மேலும் கல்லறை திருநாள் சிறப்பு பிரார்த்தனை தேவாலயங்களில் நடந்தது. இதைப்போல திருவாரூர் பவித்திர மாணிக்கம் பகுதியில் கல்லறை திருநாள் பிரார்த்தனை நடந்தது

மன்னார்குடி

கல்லறை திருநாளையொட்டி மன்னார்குடி மாதாகோவில்தெரு புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை செபாஸ்டின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் ஆலய வளாகத்தில் இருந்த கல்லறைகள் மற்றும் அருகிலிருந்த கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கல்லறை தோட்டத்தில் உள்ள இறந்த தாய், தந்தையர், உறவினர்கள், நண்பர்களின் கல்லறைகளுக்கு வர்ணம் பூசி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்திகள் ஏற்றிவைத்து கிறிஸ்தவர்கள் வழிபட்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலய பங்கில் உள்ள 18 கிளை கிராமங்களில் கல்லறை திருநாளையொட்டி உயிரிழந்த முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு பங்கு ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் மாலை 4.30 மணிக்கு மடப்புரம் கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உறவினர்கள் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்களை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டிக்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்