அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

ஆறுமுகநேரியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-12-31 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் ஆறுமுகநேரியின் நகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், நகர அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர்.ரவிச்சந்திரன், திருச்செந்தூர் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் பொன்ராஜ், திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு, நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, நகர பா.ஜனதா தலைவர் முருகேச பாண்டியன், அனைத்து வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தின் தலைவர் தாமோதரன், ஆறுமுகநேரி நகர் நல மன்ற தலைவர் பூபால் ராஜன், காமராஜர் நற்பணி மன்ற தலைவர் ராமஜெயம் ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி அருகில் உள்ள கொடி கம்பங்கள் மற்றும் உபயோகமற்ற கிணற்றினை அகற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆறுமுகநேரி பகுதியில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பல நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்காக சாலையினை விரிவுப்படுத்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலை துறையை கேட்டுக் கொள்வது, ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் நியமனம் செய்ய சுகாதார துறையை கேட்டு கொள்வது, பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் போதும், பள்ளி முடிந்து திரும்பி வரும் போதும் பள்ளிவாசல் பஜாரில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மற்றும் கே.ஏ.மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க காவல் துறையை கேட்டுக் கொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்