அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொழிற்சங்கத்தின் (டி.யு.சி.சி.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொழிற்சங்கத்தின் (டி.யு.சி.சி.) சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாண்டி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் திருப்பதி, மாவட்ட பொதுச்செயலாளர் காசிமாயன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது. ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்து அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரமாக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.27 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறியும் கோஷங்கள் எழுப்பினர்.