அகில இந்திய அளவிலான இரட்டையர் பேட்மிண்டன் போட்டி

குடியாத்தத்தில் நடந்த அகில இந்திய அளவிலான இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் திருவனந்தபுரம் அணி முதல் பரிசு வென்றது.

Update: 2023-01-22 15:18 GMT

குடியாத்தத்தை அடுத்த நத்தம் பகுதியில் உள்ள சாய் பிரண்ட்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கில் சிங்கப்பூர் சரவணன் பேட்மின்டன் அகாடமி சார்பில் அகில இந்திய அளவிலான இரட்டையர் பேட்மிண்டன் போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த 158 அணிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

போட்டி தொடக்க விழாவில் தாழையாத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அமுலுஅமர், தொழிலதிபர் சி.கே.முனாஸ், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வினய் மற்றும் அரி அணி முதல் பரிசாக ரூ.40 ஆயிரம் மற்றும் கோப்பையை வென்றது. கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் கவுதம் அணி 2-வது பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை வென்றது.

இதில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகள் மற்றும் 40 வயதிற்கான மற்றும் அனைத்து வயதினரும் கலந்து விளையாடிய இரட்டையர் இறகு பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அகாடமி தலைவர் எஸ்.சரவணன், விழாக் குழுவினர் சி.முரளி, ஜெ.உதயராஜ், எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்