கொரோனா சிகிச்சைக்கு அனைத்து வசதிகளும் தயாராக உள்ளது
வாலாஜா அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வடசதிகளும் தயாராக உள்ளதாக கண்காணிப்பாளர் உஷாந்தினி தெரிவித்தார்.
ஒத்திகை
சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நோய் தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று மூலமாக ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் நோய் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைக்கு வருபவரை செவிலியர்கள் பாதுகாப்பு உடையில் மருத்துவரிடம் அழைத்து செல்லுதல், அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து நோய் தீவிரம் தெரிந்து கொள்ளுதல், இதர பாதிப்புகள் குறித்து அறிந்து கொண்டு, கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையான ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் படுக்கைகள் அல்லது சாதாரண கொரோனா வார்டில் அனுமதிப்பது குறித்த ஒத்திகை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் நடந்தது.
தயார் நிலையில்
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி கூறுகையில் மருத்துவமனையில் மொத்தம் 230 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 24 ஐ.சி.யு. படுக்கைகள், 206 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தினமும் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் உபகரணங்கள் வசதி உள்ளதாகவும், 34 ஆக்சிஜன் பிளாண்ட், 20 மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என அனைத்து வசதிகளும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.