வடமாநில தொழிலாளர்களின் அனைத்து ஆவணங்களையும் பெற வேண்டும்

வடமாநில தொழிலாளர்களின் அனைத்து ஆவணங்களையும் பெறவேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

Update: 2023-03-10 18:06 GMT

விழிப்புணர்வு கூட்டம்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகள் பரவியதால் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். மேலும் தமிழகத்தில் இது தொடர்பான பதற்றம் நிலவியது.

இந்த நிலையில் தமிழக காவல்துறை மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் மன்றத்தில் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனத்தினருக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பேசியதாவது:-

கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும்

வேலைக்கு அமர்த்தும் வடமாநில தொழிலாளர்களின் அனைத்து ஆவணங்களையும் பெறவேண்டும். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

அவர்களின் குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் புகார்கள் இருந்தால் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வேலைக்கு அமர்த்தும் போது அவர்களின் கைரேகைகளையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்