அனைத்து துறையினர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறையினர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறையினர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையின் போது மாவட்டத்தில் பாதிக்கக்கூடிய பகுதிகளை முன் கூட்டியே ஆய்வு செய்து அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
குடிநீர்- உணவு
பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வருவதற்கான அனைத்து வசதிகள் மற்றும் தங்க வைப்பதற்கான முகாம்கள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை அலுவலர்கள் உடனே ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
முகாமில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு குடிநீர், உணவு உடனடியாக கிடைக்கும் வகையில் உணவு பொருட்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவையான இடத்தில் மின்சார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மழைநீர் தேங்கும் பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகளை தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
பயிற்சி
சாலைகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த தேவையானமரம் அறுக்கும் கை எந்திரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயாராக வைத்து கொள்ள வேண்டும். தன்னார்வலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். மருத்துவதுறையினர் பாம்புகடி உட்பட்ட அனைத்து மருந்துகளையும் வைத்து கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், உதவி கலெக்டர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனா மணி (மன்னார்குடி), மாவட்ட வழங்கல் அலுவலர் கயல்விழி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன்குமார், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லதா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.