திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை

Update: 2023-04-24 18:45 GMT

கோவை

சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் மட்டுமே மது அருந்த அனுமதி என்றும், திருமண மண்டபங்களில் அனுமதி இல்லை என்றும் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

மானியத்துடன் வீடு

கோவை கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.4 லட்சம் வீதம் 26 நெசவாளர்களுக்கு வீடு கட்ட ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பிலான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார். கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வதேச போட்டிகள் நடைபெறும் இடங்களில்...

சர்வதேச அளவிலான கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிற போது, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி உள்ளது.

சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்றால் மற்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதால் அதற்கான அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

திருமண மண்டபங்களில் அனுமதி இல்லை

சர்வதேச நிகழ்வு, போட்டிகள் நடைபெறும் இடங்களில் மது அருந்த அனுமதி கேட்டதால் தரப்பட்டு உள்ளது. ஐ.பி.எல். போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் மது அருந்துவதற்கான அனுமதியை வாங்கி வைத்து உள்ளனர்.

ஆனால் திருமண மண்டபங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகளில் மது அருந்த ஒருபோதும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அரசும் இதற்கு அனுமதி கொடுக்காது.

தமிழகத்தில் உச்சபட்ச மின்தேவை, 19 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. இருப்பினும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் டெண்டர் கோரப்பட்டு அவசர தேவைக்கு ஒரு யூனிட் ரூ.8-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன்மூலம் கடந்த 3 மாதத்தில் ரூ.1,313 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

சொத்துபட்டியல்

ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்பதற்கும் சொத்து பட்டியல் வெளியிடுவேன் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டு சொத்துபட்டியல் வெளியிட்டுள்ளார்.

இது அவரவர் வேட்புமனு தாக்கலில் உள்ளது. ஊழலுக்கும், சொத்து பட்டியலுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

200 ஏக்கரில் ஐ.டி. பார்க், ரூ.9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் என சென்னைக்கு இணையான வளர்ச்சியை கொடுத்து, கோவைக்கு முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

அரசுக்கு எதிராக களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிடுபவர்கள் யாராக இருந்தாலும் கோர்ட்டு மூலம் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்