சென்னை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் 205 கிலோ தங்கம், 28 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் 205 கிலோ தங்கம், 28 கிலோ போதைப்பொருள் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் ரூ.94.22 கோடி மதிப்புள்ள 205 கிலோ தங்கம் மற்றும் ரூ.14.02 கோடி மதிப்புள்ள 27.665 கிலோ போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 104 பேரை கைது செய்தனர். மேலும் 81 வழக்குகளில் 10.978 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 7 பேரை கைது செய்தனர்.
பெரும்பாலான வழக்குகளில், துபாய், ஷார்ஜா மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. கோகோயின், மெத்தகுலோன், ஹெராயின், கஞ்சா, எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்திய 12 வழக்குகளில் 12 பேரை கைது செய்துள்ளனர்.
அதேபோல, அல்பினோ முள்ளம்பன்றி, வெள்ளை உதடு கொண்ட புளி குரங்கு, க்யூகஸ்டிக் சுகர் கிளைடர், சே பிராஸா குரங்கு, ராஜபாம்புகள், பந்து மலைப்பாம்புகள் மற்றும் அல்டாப்ரா ஆமைகள் போன்ற அயல்நாட்டு வனவிலங்குகளின் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டு, இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐந்து வழக்குகளில் ரூ.1.269 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மற்றும் பிற விலைமதிப்பற்ற கற்களை சுங்கத்துறை கைப்பற்றியதுடன், ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் சிகரெட், எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தியதாக பல வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.3.90 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2021-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2021-ம் ஆண்டில் 70.12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். இது கடந்த ஆண்டு 94.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.11 கோடியில் இருந்து ரூ.14 கோடியாகவும், வெளிநாட்டு கரன்சிகள் ரூ.9 கோடியில் இருந்து ரூ.10.98 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, புதன்கிழமை துபாயில் இருந்து இங்கை வழியாக விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த 32 வயது நபரிடமிருந்து ரூ.43.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லேப்டாப் அடாப்டர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 809 கிராம் எடையுள்ள 24 காரட் 27 தங்க பிளக் பின்கள், 6 புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் 57 மொபைல் போன்கள் ஆகியவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.