ஓசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை
ஓசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
ஓசூர்:
ஓசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
ஓசூரில், மாவட்ட அளவிலான ஏற்றுமதி பங்குதாரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். தொழில்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிசி பச்சுவா, செல்லகுமார் எம்.பி., ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன் வரவேற்றார்.
கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது:-
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், ஏற்றுமதி மையமாக மேம்படுத்துவதற்கு தேர்வு செய்துள்ள 75 மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டம் ஆட்டோ, மலர் சாகுபடி, பழங்கள், பழக்கூழ் தயாரிப்புகள், கிரானைட் மற்றும் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை மையப்படுத்தப்பட்ட தயாரிப்பு அடையாளம் கண்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாடு 8.97 சதவீதம் மற்றும் மாநிலங்களில் 3-வது இடத்தில் உள்ளது.
விமான நிலையம்
தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதியில், கிருஷ்ணகிரி மாவட்டம் 15 முதல் 16 சதவீதம் பங்களிக்கிறது. வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில், கிருஷ்ணகிரி மாவட்டம் 2-ம் நிலையில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள சிறு, குறு நடுத்தர நிறுவனங்களில் சுமார் 25 ஆயிரம் அலகுகள் கனரக பொறியியல் மற்றும் ஆட்டோமொபைல் தொழில்கள், மருந்து ரசாயன தொழில் நிறுவனங்களும், கிரானைட் செயலாக்க நிறுவனங்கள் போன்ற 110 முக்கிய நிறுவனங்களை கொண்டதாக உள்ளது.
தமிழக அரசு, ஓசூரில் தொழில் துறை செயல்பாடுகளை அதிகரிக்க ஆர்வமாக உள்ளது. அதற்காக மாவட்ட நிர்வாகம், சிப்காட் 3, 4 மற்றும் 5-ம் கட்டங்களை அமைப்பதற்கான நிலங்களை கண்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஓசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் வெளிநாட்டு ஏற்றுமதி இணை இயக்குனர் விஸ்வாஸ்,. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூடுதல் இயக்குனர் ஜெகதீஷ், சி.எச்.நாடிகர், ஷோபனாகுமார், சாந்தகுமார் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.