உற்சாகத்துடன் சுற்றி வரும் அாிக்கொம்பன் யானை

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் அரிக்கொம்பன் யானை உற்சாகத்துடன் சுற்றி வருகிறது.

Update: 2023-06-17 18:45 GMT

நாகர்கோவில்:

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் அரிக்கொம்பன் யானை உற்சாகத்துடன் சுற்றி வருகிறது.

அரிக்கொம்பன் யானை

கேரளாவில் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் மற்றும் குமுளி ஆகிய இடங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் லாரி மூலம் அரிக்கொம்பன் யானை, நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

அரிக்கொம்பன் யானை விடப்பட்ட பகுதியானது குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கு மேல் உள்ள இயற்கை எழில்கொஞ்சும் முத்துக்குழிவயல் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.

நடமாட்டம் கண்காணிப்பு

அந்த யானை குமரி வனப்பகுதிக்குள் நுழைகிறதா? என்பதை அறிய அதன் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அதாவது அரிக்கொம்பன் யானையின் காதில் பொருத்தப்பட்டு உள்ள ரேடியோகாலர் எனப்படும் எலக்ட்ரானிக் கருவியை பயன்படுத்தி ஜி.பி.எஸ். மூலம் வனத்துறை அதிகாரிகள் யானையின் உடல்நிலை, நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

குமரி மாவட்ட வனத்துறை ஊழியர்களும் முத்துக்குழிவயல் பகுதியில் முகாமிட்டு அரிக்கொம்பன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். ஆனால் அப்பர் கோதையாறு பகுதியில் எங்கும் பசுமை நிலவுவதால் அரிக்கொம்பன் யானைக்கு நல்ல உணவு கிடைக்கிறது. மேலும் அருகே குற்றியாறு அணை இருப்பதால் அங்கு சென்று தண்ணீர் குடித்து நன்றாக ஓய்வெடுத்து வருகி றது.

முண்டந்துறை சரணாலயத்தில்...

இந்த நிலையில் தற்போது அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதியில் உற்சாகத்துடன் சுற்றித்திரிகிறது. அங்குள்ள புல்வெளியில் படுத்து தூங்குகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இதை வைத்து பாா்க்கும் போது அப்பர் கோதையாறு வனச்சூழல் அரிக்கொம்பன் யானைக்கு ஏதுவானதாக அமைந்து விட்டதாகவும், எனவே இனி குடியிருப்பு பகுதிக்குள் வர வாய்ப்பு இல்லை என்றும் வனத்துறையினர் தொித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்