தோப்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டப்பணி தொடங்கப்படுமா?
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள்ளாவது தோப்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டப்பணி தொடங்கப்படுமா? என தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.;
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள்ளாவது தோப்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டப்பணி தொடங்கப்படுமா? என தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எய்ம்ஸ்ஆஸ்பத்திரி
கடந்த 2015-ம் ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான இடம் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இத்திட்ட பணிக்கான நிதி ஒதுக்கீட்டினை ஜப்பான் நிதி நிறுவனம் வழங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டினார்.
நிதி ஒதுக்கீடு
பின்னர் திட்டப்பணி விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திட்ட மதிப்பீடு மாறுபட்டதால் ஜப்பான் நிதி நிறுவனம் இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில் திட்ட பணி தொடங்கப்படவில்லை. எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாக குழுவின் தலைவர் டாக்டர் அனுமந்த ராவ் திட்டப்பணி 2024-ல் தொடங்கி 2026-ல் முடிக்கப்படும் என தெரிவித்தார். ஆனாலும் தற்போதைய நிலையில் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
கடந்த 2017-ம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டப்பணி தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் இது பற்றி ஜப்பான் நிதி நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது திட்ட மதிப்பீடு மாறுபடும்போது மீண்டும் அதற்கான அனுமதி பெற்ற பின்பு தான் நிதி வழங்க முடியும் என்ற நிலை உள்ளதால் இதற்கு தாமதமாகும் என்று தெரிவித்ததாக கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல்
தொடர்ந்து தாமதிக்கும் நிலையில் இடுபொருள்களின் விலை உயர்வால் திட்ட மதிப்பீடு தொடர்ந்து மாறுபடும் நிலை உள்ளது. இதனால் ஜப்பான் நிதி நிறுவனம் எப்போது நிதி ஒதுக்கீடு செய்யும்? திட்ட பணி எப்போது தொடங்கும்? என்பது உறுதி இல்லாத நிலைதான் நீடிக்கிறது.
மொத்தத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள்ளாவது திட்டப்பணி தொடங்க வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.