இரவு நேர மின்தடையால் விவசாயம் பாதிப்புகுறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

கடலூர் மாவட்டத்தில் இரவு நேர மின்தடையால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

Update: 2023-07-21 18:45 GMT

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

மின் தடை

சக்திவேல் :- விருத்தாசலம் பகுதியில் பகலில் மின்சாரம் இருக்கிறது. ஆனால் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் என்னை போன்ற விவசாயிகள் அவதிப்படுகிறோம். விவசாய பணி பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகவே தடையின்றி இரவு நேரத்திலும் மின்சாரம் வழங்க வேண்டும் என்றார்.

இதை கேட்டதும் மற்ற விவசாயிகளும் எழுந்து, மாவட்டம் முழுவதும் இதே நிலை உள்ளது. ஆகவே தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

முருகானந்தம் :- என்.எல்.சி. உபரி நீர் வெள்ளாற்றில் கலப்பதை தடுத்து, இப்பகுதி விளைநிலங்களுக்கு திருப்பி விட்டால், 40 கிராம விவசாயிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

மகாராஜன் :- வெலிங்டன் ஏரியை தூர்வாரி, சுற்றுலா தலமாக்க வேண்டும். ஆவினங்குடி பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

வண்டல் மண் எடுக்க அனுமதி

அறவாழி :- நடுவீரப்பட்டு உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 2 மின்மாற்றிகளில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. இதை சீரமைத்து தர வேண்டும் அல்லது புதிய மின்மாற்றிகள் அமைத்து தர வேண்டும். கடந்த 15 நாட்களுக்கு மேலாக விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. ஆகவே தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேவநாதன் :- மலட்டாறு ஷட்டரை சீரமைத்து தர வேண்டும். மணப்புத்தூர் ஏரியை தூர்வார வேண்டும். நத்தம் ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். கோட்ட அளவில் திங்கட்கிழமை நடக்கும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்த வேண்டும்.

ராமலிங்கம் :- குறிஞ்சிப்பாடி தாழவாய்க்காலில் பாலம் கட்ட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் பணி இன்னும் நடக்கவில்லை.

ராமானுஜம் :- ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்ய மனு கொடுத்தேன். தற்போது அந்த மனுவை காணவில்லை என்று சொல்கிறார்கள். நோயால் கரும்பு பாதித்துள்ளது. ஆகவே பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.

பயிர் காப்பீடு

ரவீந்திரன் :- பயிர் காப்பீட்டு திட்டத்தில் நடப்பாண்டு பாதிக்கப்பட்டால் இழப்பீடு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனையை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எலிகளை கட்டுப்படுத்த மாற்று மருந்துகளை அடையாளபடுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வராஜ் :- ஸ்ரீமுஷ்ணம் தாலுகா பகுதியில் உள்ள முக்கண்ணு வாய்க்காலை தூர்வார வேண்டும். குணமங்கலம்-கீரனூர் இடையே தடுப்பணை கட்ட வேண்டும். ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு கூடம் அமைத்து தர வேண்டும்.

சிவக்குமார் :-இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

முன்னதாக விவசாயிகளின் கோரிக்கை விவரங்களை குறிப்பெடுத்துக்கொண்ட மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தொடர்ந்து அவர்கள் அளித்த மனுக்களையும் பெற்றுக்கொண்டார். வழக்கமாக விவசாயிகளின் கேள்விக்கு இறுதியாக பதில் அளித்து கலெக்டர் பேசுவார். ஆனால் நேற்று விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து எதுவும் பேசவில்லை. இதையடுத்து கூட்டம் நிறைவு பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்