விவசாய பணிகள் தீவிரம்

வெம்பக்கோட்டை பகுதிகளில் சாரல்மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-25 19:05 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை பகுதிகளில் சாரல்மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாரல்மழை

வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி, அம்மையார்பட்டி, சக்கம்மாள்புரம், மூர்த்திநாயக்கன்பட்டி, கொட்டமடக்கிபட்டி ஆகிய பகுதிகளில் சாரல்மழை பெய்து வருகிறது. ஆதலால் மானாவாரி பயிரான மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி பயிரிடுவதற்காக உழவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து செவல்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம் கூறியதாவது:-

செவல்பட்டி பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் இலந்தைகுளம் கண்மாய், பாலாறு கண்ட அய்யனார் கண்மாய், பாம்பாலம்மன் கண்மாய்களை நம்பியுள்ள விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக நிலங்களில் டிராக்டர் கொண்டு உழவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மானிய விலையில் விதைகள்

அவ்வப்போது பெய்யும் சாரல் மழையினால் நிலம் பதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புரட்டாசி மாதம் விதைக்கும் பணி மிகவும் எளிதாக இருக்கிறது. சென்ற ஆண்டு எதிர்பார்த்ததை விட விவசாயம் நன்றாக இருந்தது.

ஏனெனில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ஆண்டு இப்பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களும் முழுமையாக நிரம்பியதால் விவசாய பணிகள் சிறப்பாக நடைபெற்றது. மானிய விலையில் சூரியகாந்தி, மக்காச்சோளம், பருத்தி, விதைகள் கிடைத்தால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டு தொடர்ந்து மழை இருக்கும், விவசாயமும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்