ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி பகுதியில் நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி பகுதியில் நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலுக்கு உள்ளானது. இதை வேளாண் விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2023-01-10 20:12 GMT

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் தாலுகா பகுதியில், நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 11 ஆயிரத்து 200 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெற்கதிர்கள் வந்து, விளைந்து வரும் நிலையில், பயிர்கள் புகையான் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதனால் மகசூல் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்து இருக்கிறார்கள்.

இதேபோன்று குமராட்சி பகுதியில் 11,000 ஹெக்டேர் பரப்பில் சம்பா நெல் நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், குமராட்சி அருகே நளன்புத்தூர், கீழப்பருத்திகுடி, மேலப் பருத்திகுடி, ஆலம்பாடி, திருநாரையூர், எடையார் உள்பட பல பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் புகையான் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

ஸ்ரீமுஷ்ணம்

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பாதிப்புகள் குறித்து அறிந்த வேளாண்மை உதவி இயக்குனர் கீதா வேளாண் விஞ்ஞானிகள் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்தார். அதன்பேரில், விதை தொழில்நுட்பவியல் துறை முனைவர் நடராஜன், பூச்சியியல் துறை முனைவர் செங்குட்டுவன் மற்றும் வேளாண் அதிகாரிகள் கொண்ட குழுவினர் காவனூர், வள்ளியம், சி.கீரனூர், மேலப்பாளையூர், கீழப்பாளையூர், பவழங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் வயல்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, அதிக அளவு தழைச்சத்து இடுவது, அடர் நடவால் பயிர்களுக்கு இடையே போதிய காற்றோட்டம் இல்லாமை ஆகியவற்றால் புகையான் நோய் தாக்குவதாக தெரிவித்தனர்.

மேலும், ஆரம்பகட்ட நோய் தாக்குதலுக்கு ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் மண்ணெண்ணெய் 10 கிலோ ஆற்று மணலுடன் கலந்து சீராக தெளித்தால் கட்டுப்படுத்தி நோய் பரவாமல் தடுக்க முடியும். மேலும், அதிக அளவு பாதிப்பு இருந்தால் மெட்ரோசல்பான் கார்போசல்பான் உள்ளிட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதங்களில் வேளாண் அதிகாரிகள் ஆலோசனைப்படி கரைசல்கள் தயாரித்து ஓரிரு முறைகள் தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம் என்று ஆலோசனைகள் வழங்கினர்.

குமராட்சி

இதேபோன்று, குமராட்சி பகுதியில் வேளாண்மை உதவி இயக்குனர் அமிர்தராஜ், வேளாண்மை அலுவலர் சிந்துஜா, உதவி வேளாண்மை அலுவலர் குணசந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ் ஆகியோர் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்