பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாமரங்களை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
வேதாரண்யம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாமரங்களை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாமரங்களை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
மாங்காய் சாகுபடி
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை, தேத்தாகுடி, கத்தரிப்புலம், புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தலைஞாயிறு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செந்தூரா, பங்கனபள்ளி, ருமெனியா, ஒட்டு என 10-க்கும் மேற்பட்ட வகையான மாங்காய் வகைகள் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் டன் மாங்காய்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.தற்போது மாங்காய் காய்த்து நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவ்வப்போது பெய்த மழை மற்றும் பனி, தேன்பூச்சி ஆகியவற்றின் தாக்குதால் மாங்காய் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது மா இலை மற்றும் மாங்காய்களில் புதிய வகை பூச்சி தாக்கியது. இந்த பூச்சி தாக்குதல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அதிகளவில் காணப்படுகிறது.
பூச்சி தாக்குதல்
இந்த பூச்சி தாக்குதலால் மாங்காய்களில் கருப்பு புள்ளி ஏற்பட்டுள்ளது. இதனால் மாங்காய்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வேளாண்மை துறை அதிகாரிகள் பூச்சி தாக்குதல் குறித்து மாங்காய் மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, அது எந்த வகையான பூச்சி தாக்குதல், அதற்கு என்ன வகையான மருந்துகளை தெளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதை தொடர்ந்து செம்போடை, தேத்தாகுடிதெற்கு, கத்தரிப்புலம் உள்ளிட்ட கிராமங்களில் நாகை தோட்டக்கலை உதவி இயக்குனர் நீதி மாணிக்கம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஞானசேகரன், கார்த்திகேயன், சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பூச்சி தாக்குதால் பாதிக்கப்பட்ட மாங்காய் மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆலோசனை வழங்கப்படும்
இந்த நிலையில் சிக்கல் வேளாண்மை அறிவியல் மையத்தில் இருந்து தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் ரகு, தொழில்நுட்ப வல்லுனர் (உளவியல்) கண்ணன் மற்றும் குழுவினர் பாதிக்கப்பட்ட மாங்காய் மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நாகை தோட்டக்கலை உதவி இயக்குனர் நீதிமாணிக்கம் கூறியதாவது:- வேதாரண்யம் பகுதியில் மாமரங்களில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பூச்சி தாக்குதல் குறித்து சிக்கல் வேளாண்மை துறை மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் மாங்காய் பூக்கும்போது கருப்பு பூஞ்சான் நோய், தத்து பூச்சி நோய் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நோய் முற்றியுள்ள நிலையில் மாம்பழங்களை மதிப்பு கூட்டல் செய்வதன் மூலம் மட்டுமே லாபம் பெற முடியும். எனவே வரும் மழைக்கால விளைச்சலுக்கு இந்த நோய் வராமல் தடுக்க விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்படும் என்றார்.