சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய வாடகையில் வேளாண் எந்திரங்கள்
சிறு, குறு விவசாயிகள், வேளாண் எந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகளை மானிய வாடகையில் பெற்று பயன்பெறலாம். என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிறு, குறு விவசாயிகள், வேளாண் எந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகளை மானிய வாடகையில் பெற்று பயன்பெறலாம். என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
வேளாண் எந்திரங்கள்
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய வாடகையில் சிறு, குறு விவசாயிகள் பெற்று பயன்பெறலாம். உழவுப்பணிகள் மற்றும் அறுவடைப் பணிகளுக்கு டிராக்டருடன் இயக்கக்கூடிய கருவிகளான சுழற்கலப்பை, நிலக்கடலை தோண்டும் கருவி, சோளம் அறுவடை எந்திரம், வைக்கோல் ரவுண்டு பேலர் போன்ற கருவிகள் 50 சதவீத மானிய வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.
புன்செய் நிலத்தில் சிறு, குறு விவசாயிகளின் உழவுப்பணிக்கு தேவைப்படும் டிராக்டர் மற்றும் உபகரணங்களை 1 ஏக்கர் நிலத்துக்கு ரூ.250-ம் அதிகபட்சமாக 5 ஏக்கர் நிலத்திற்கு 5 மணி நேரத்துக்கு மொத்த வாடகையில் ரூ.1,250-ம்- பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். நன்செய் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நிலத்திற்கு மொத்த வாடகையில் ரூ.625 பின்னேற்பு மானியமாக பெற்று பயன்பெறலாம்.
முன்பதிவு
மேற்கண்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம். தாங்கள் செலுத்திய தொகையை பின்னேற்பு மானியமாக தங்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு, இளையான்குடி, காளையார்கோவில், சிவகங்கை, மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டார சிறு, குறு விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), சிவகங்கையையும், தேவகோட்டை, கல்லல், கண்ணங்குடி, எஸ்.புதூர், சாக்கோட்டை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டார சிறு, குறு விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ) காரைக்குடியையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.