மழையுடன் நிறைவு பெற்ற அக்னிநட்சத்திரம்

கோவையில் அக்னிநட்சத்திரம் மழையுடன் நிறைவு பெற்றது.

Update: 2023-05-29 19:00 GMT

கோவை

கோவையில் அக்னிநட்சத்திரம் மழையுடன் நிறைவு பெற்றது.

அக்னி நட்சத்திரம்

சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலக்கட்டமே அக்னிநட்சத்திரம். இது மிக அதிக வெப்பம் கொண்ட கத்திரி வெயில் காலம் ஆகும். அதன்படி இந்த ஆண்டு கடந்த 4-ந் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கியது.

கோவையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய மறுநாள் மழை பெய்தது. அதன்பிறகு சற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனாலும் அவ்வப்போது கோடை மழை பெய்தது. இதனால் கடும் வெப்பத்தால் கொதித்த கோவை அவ்வப்போது குளிர்ந்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

அக்னி நட்சத்திர வெயிலின் போது வெப்பத்தின் அளவு அதிக மாக இருந்ததால் மக்கள் அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், சர்பத், பழங்கள், பழரசங்கள், மோர் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட்டு வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொண்டனர்.

இந்தநிலையில் கோவையில் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவடைந்தது. காலையில் இருந்து மதியம் 2 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

ஆனால் மதியம் 2.45 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு திடீரென்று மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.

மழையை பொருட்படுத்தாமல் சிலர் நனைந்தபடி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தனர். அக்னிநட்சத்திரம் தொடங் கும் போதும், முடியும் போதும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழையால் வெப்பம் தணிந்து கோவையில் குளிர்ந்த காலநிலை நிலவியது.

ஆலங்கட்டி மழை

கோவை இடையர்பாளையம், கோவில்மேடு, டி.வி.எஸ்.நகர் உள்பட ஒரு சில இடங்களில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது சிறிய அளவிலான ஐஸ்கட்டிபோல் ஆலங்கட்டி மழைத்துளிகள் கீழே விழுந்தன.

அவற்றை சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கைகளில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்