ராமேசுவரத்தில் பக்தர்கள் புனித நீராடும் பகுதியில் அக்னி தீர்த்தக்கடல் திடீரென உள்வாங்கியது

ராமேசுவரத்தில் பக்தர்கள் புனித நீராடும் பகுதியில் அக்னி தீர்த்தக்கடல் திடீரென உள்வாங்கியது.

Update: 2023-05-07 23:55 GMT

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், ராமேசுவரத்துக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டமும் அதிகமாக இருந்தது. அக்னி தீர்த்தக்கடலில் நீராட ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

உள்வாங்கியது

நேற்று காலை முதலே பக்தர்கள் புனித நீராடும் பகுதியில் பல அடி தூரத்திற்கு கடல் திடீரென உள்வாங்கியது. இதன் காரணமாக கடலில் உள்ள பாறைகள், பாசிகள் மற்றும் சேதம் அடைந்த நிலையில் கடலில் வீசப்பட்ட சிலைகளும் ஆங்காங்கே வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கி காணப்பட்டதால் நேற்று புனித நீராட வந்த பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலை மிகுந்த ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

மேலும் சிறிது தூரம் கடலுக்குள் நடந்து சென்று நீராடி விட்டு சென்றனர். அதே நேரத்தில் கடலுக்கு செல்லும் நுழைவுப்பகுதியில் வழக்கம்போல் பக்தர்கள் நீராடினர்.

நேற்று காலை 9 மணி வரையிலும் உள்வாங்கி காணப்பட்ட கடலானது, நேரம் செல்லச்செல்ல சகஜ நிலைக்கு திரும்பியது. வழக்கமாக இது போன்ற சீசனில் கடல்நீர் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையான ஒன்றுதான் எனவும், இதனால் பயப்பட தேவையில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்