அக்னி நட்சத்திரம் முடிந்தும் வாட்டி வதைக்கும் வெயில்
வேலூரில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.
வேலூர்
வேலூரில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.
கோடை வெயில்
வேலூரில் கோடை காலம் தொடங்கும் முன்பு இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கோடை காலம் தொடங்கியபோது தினமும் சூரியன் சுட்டெரிக்கும் வெயிலை கக்கியது. இதனிடையே அசானி புயல் காரணமாக லின் 2 வாரங்கள் வேலூர் மாவட்டத்தில் மழை மற்றும் மேககூட்டங்களால் வெப்பம் தணிந்து காணப்பட்டது.
அக்னி நட்சத்திரம் கடந்த 28-ந் தேதி முடிவடைந்தது. இனிமேல் வெயில் குறைந்துவிடும் என்று வேலூர் வாசிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையை தந்தது. கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கும் மேல் பதிவாகியது.
வேலூரில் சனிக்கிழமை காலை 7 மணிக்கே 10 மணிக்கு வெயில் அடிப்பதுபோல இருந்தது. பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை எங்கு பார்த்தாலும் அனல் கக்கியது. நேற்றைய வெயில் அளவு 106 டிகிரியாக பதிவாகியது.
மக்கள் தவிப்பு
நகரத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிற்கும்போது காலில் தீவைத்ததுபோல வெயில் சுட்டெரித்தது. பஸ் உள்ளே இரும்பு கம்பிகளும் சூடாக இருந்தது.
வெயிலின் தாக்கத்தை பொறுக்க முடியாமல் நடந்து சென்றவர்களும், தள்ளுவண்டியில் வியாபாரம் செய்தவர்களும் தண்ணீர் பாக்கெட்டுகளை கடைகளில் வாங்கி அந்த தண்ணீரை தலையிலும், உடலிலும் தெளித்துக்கொண்டனர். சிலர் கைக்குட்டைகளை ஈரமாக்கி தலையில் போட்டு நடந்து சென்றதையும் காணமுடிந்தது.
இளநீர், ஐஸ்மோர், கரும்புச்சாறு போன்ற குளிர்பானங்கள் விற்பனை படுஜோராக இருந்தது. மதுபிரியர்கள் மதுக்கடைகளில் ஐஸ் பீர் வாங்கிக்குடித்தனர்.
அதிக வெப்பத்தின் காரணமாக நகர சாலைகளில் பல இடங்களில் தார் உருகியது. கானல் நீரும் தென்பட்டது. இரவில் வீடுகளில் மக்கள் தூங்கமுடியாமல் தவித்தனர்.