அக்னிபத் திட்ட இலவச பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த வேண்டும்

தேனி அருகே நடப்பதாக அறிவிக்கப்பட்ட அக்னிபத் திட்ட இலவச பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இளைஞர், மாணவர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-07-12 13:29 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இடதுசாரி இளைஞர், மாணவர் கூட்டமைப்பு சார்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ், அகில இந்திய மாணவர் பிளாக் தேசியக்குழு உறுப்பினர் திவாகரன் மற்றும் அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம், புரட்சிகர இளைஞர் கழகம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், "மத்திய அரசு ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தேனி அருகே வீரபாண்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாரதீய பண்பாட்டு சேவா கேந்திரம் என்ற அமைப்பு சார்பில், அக்னிபத் இலவச பயிற்சி முகாம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மாணவ, மாணவிகள் படித்து வரும் கல்லூரி வளாகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்துவது ஏற்புடையதல்ல. எனவே கல்லூரி வளாகத்தில் இந்த பயிற்சி முகாம் நடக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்